Monday, May 31, 2010

உற்சாகத்துடன் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் மே 28, 29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாயிலைத் திறக்க வேண்டும். இல்லையேல் நேரடி நடவடிக்கை எடுப்போம் என்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தீண்டாமைக்கொடுமைகளை வேரோடு சாய்க்க தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், நடுத்தர வர்க்க சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பை உருவாக்கின. ஆலயநுழைவு மறுப்பு, மயானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஏராளமான இயக்கங்களை நடத்தி வெற்றி கண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முறையான அமைப்பாக மாறும் வகையில் தனது முதல்மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளது.

முதல்மாநில மாநாட்டையொட்டி, மாநிலம் முழுவதும் வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. கீழ்த்தஞ்சை வெண்மணி, மதுரை மேலவளவு, திருப்பூர் இடுவாய் ஆகிய இடங்களிலிருந்து நினைவு ஜோதிகள் எடுத்துச் செல்லப்பட்டன. மே 28 அன்று காலையில் புதுக்கோட்டை பி.வி.ஆர். மண்டபத்தில் துவங்கிய மாநாட்டிற்கு விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமையுரையாற்றினார். அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் மீதான விவாதத்தில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முன்னாள் ஐஏஸ் அதிகாரி வி.கருப்பன் மற்றும் எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கதிர் ஆகியோரும், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்களும் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு பொதுச்செயலாளர் உ.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் கே.எஸ்.கனகராஜ் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் முதல் நாள் விவாதத்திற்குப்பிறகு நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் நா.முத்துநிலவன் பங்கேற்ற வழக்காடு மன்றம், புதுகை பூபாளம் கலைக்குழுவின் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்ட தீண்டாமை எதிர்ப்புக் கலைவிழா நடைபெற்றது. மாநாட்டையொட்டி ஓவியக்கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கவிதை - ஓவியக்கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாநில அமைப்பாளர் பி.சம்பத் தொகுப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டின் நிறைவாக தலித் மக்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றன. புதுக்கோட்டையின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் துவங்கிய இந்த பேரணியை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராசன் துவக்கி வைததார். சந்தைப்பேட்டை, திலகர் திடல், பிருந்தாவனம் வழியாக சென்ற இந்தப்பேரணி சின்னப்பா பூங்காவில் நிறைவு பெற்றது.

பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். புதுவை சப்தர் ஹஷ்மி குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளும் இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர், எஸ்.கே.மகேந்திரன் மற்றும் கு.ஜக்கையன் உள்ளிட்ட 17 பேரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி உள்ளிட்ட 17 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை உள்ளடக்கிய 98 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாயிலை ஒரு மாத காலத்தில் திறக்க வேண்டும் எனவும், இல்லையேல் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என்ற அறைகூவல் இந்த மாநாட்டில் விடப்பட்டது. இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தலித் இட ஒதுக்கீடு சதவீதம் உயர்வு, தனியார் துறை இட ஒதுக்கீடு, நிலுவைக் காலியிடங்கள நிரப்பப்படுவதை வலியுறுத்தியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அமைக்குமாறு வலியுறுத்தியும், வன்கொடுமை, தீண்டாமைக்குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் கோரியும், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அரச மர வழிபாட்டிற்கும், பேருந்து நிழற்குடை அமைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் கோரியும், பஞ்சமி நில மீட்பை வலியுறுத்தியும், தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டித்தும், புதிரை வண்ணார் சமூகத்திற்கு தாமதமின்றி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், காங்கியனூர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், தலித்துகளுக்கு நிலம், பட்டா கோரியும், தொகுப்பு வீடு பராமரிப்பு வலியுறுத்தியும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அமலாக்கத்தை கண்காணிக்க வலியுறுத்தியும், டாக்டர்.அம்பேத்கர் வரலாற்று திரைப்படத்தை திரையிட்டு ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆதித்திராவிடப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடும், தரம் உயர்த்தலும் கோரியும், தலித்துகளும் கோவில் அர்ச்சகர்களாகிற உரிமையை வலியுறுத்தியும், புதுச்சேரியிலும் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக்கோரியும், புதுவைக்கு புலம் பெயர்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கோரியும், பழங்குடி மக்கள் நில உரிமை, வன உரிமை பாதுகாக்கக்கோரியும், தலித் உட்கூறு திட்ட நிதி ஒதுக்கீட்டை நீர்த்துப்போகாமல் முழுமையாக அமலாக்குமாறு வலியுறுத்தியும், ஆதிதிராவிட நலத்துறையை செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய தேர்வாணையத் தேர்வின் பொதுப்பட்டியலில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தலித் கிறித்தவர்களை பட்டியல் இனத்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

1 comment: