Monday, May 31, 2010

சாதியமைப்பிற்கு சவால் விடுத்த மாநாடு!


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு வெற்றி மாநாடாக மட்டுமல்ல, எழுச்சி மாநாடாகவும் அமைந்தது. முடிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் மிகப்பெரும்பான்மையாக 420 பேர் கலந்து கொண்டனர். இதில் தலித் பழங்குடியினர் 70 சதவிகிதம், இதர பிரிவினர் 30 சதவிகிதம் என்பது நம்பிக்கையளிக்கக்கூடிய நல்ல கலவையாகும். தலித் மக்களின் பல்வேறு உட்பிரிவைச் சேர்ந்தவர்களும், அதில் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றனர். மொத்த பிரதிநிதிகளில் 20 சதவிகிதம் (85 பேர்) அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும், தலித் கிறிஸ்தவர் பிரதிநிதிகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இடம் பெற்றிருந்த வர்க்க வெகுஜன அமைப்புகளிலிருந்தும் தலித் அமைப்புகளிலிருந்தும் முழு அளவில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இது இந்த அமைப்பின் விரிந்து பரந்த ஜனநாயகத் தன்மையை மட்டுமல்ல, இதன் மூன்றாண்டு கால ஒருங்கிணைந்த வெற்றிப் பயணத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.


கருத்தொற்றுமை


மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இயக்க வேலை அறிக்கைக்கு பொதுவான ஏற்பு இருந்தது. விவாதத்தில் 44 பேர் பங்கேற்றுப் பேசினார்கள். ஒருவர் கூட முரண்பட்டுப் பேசவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நோக்கம், இயக்க கட்டமைப்பு, நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் அவை குறித்த மதிப்பீடு போன்ற எல்லா அம்சங்களிலும் கருத்தொற்றுமை காண முடிந்தது. தீண்டாமை ஒழிப்பு உடனடிப்பணி என்றாலும், சாதியமைப்பைத் தகர்ப்பதே பிரதான குறிக்கோள். அப்பார்வையோடுதான் களப்போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டும். இதுவே பொதுப் பார்வையாக இருந்தது.


பிரகாஷ் காரத் உரை


மாநாட்டில் தோழர் பிரகாஷ் காரத் பங்கேற்றது உத்வேகமூட்டும் நிகழ்வாக இருந்தது. பிரதிநிதிகள் பலரின் விவாதங்களை அவர் நேராகக் கேட்டார். மாநாட்டில் அவர் ஆற்றிய உரை பிரதிநிதிகளின் ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கு அப்பால் பிற பகுதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காகவும், இயக் கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகம் தந்துள்ளது... “காரல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும் போது அதை பொருளாதாரப் புரட்சி என்றோ அரசியல் புரட்சி என்றோ சொல்ல வில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்றே கூறுவார். இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைகளை ஒழிக்காமல் புரட்சி சாத்தியமல்ல. கம்யூனிஸ்டுகள் சமூகப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருப்பது உண்மையானால், அனைத்து சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் முன் நிற்கிறோம் என்பதை நடைமுறையில் எடுத்துக் காட்ட வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள் பிரதிநிதிகள் மனதில் நம்பிக் கையை விதைத்தது.


மாநாட்டு அறைகூவல்


மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் தலித் மக்களின் சமூகப் பொருளாதார நிலைபாடு பற்றிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனடி நடவடிக்கைகளுக்கான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நடந்து வந்த வாசல் அடைக்கப் பட்டிருப்பது பற்றியதாகும். அந்த வாசலைப் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்குடன் சுவர் எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது. இது தீண்டாமைச் செயலாகும். அக்காலத்தில் ஆதிக்க சக்திகள் எழுப்பிய சுவரை இன்றளவும் பாதுகாப்பது தீண்டாமையைப் பாதுகாப்பதாகும். எனவே அந்தச் சுவரை தமிழக அரசு தலையீடு செய்து அகற்ற வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றப்படாவிட்டால் ஜனநாயக சக்திகள், ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டி அச்சுவரை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளுக்கும் செல்ல மாநாடு அறைகூவல் விடுத்தது. உத்தப்புரத்தில் நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. தலைமையில் சாலை மறியலில் ஈடுபடுவதென மாநாடு தீர்மானித்தது. அருந்ததியர் மக்களின் தீர்வு காணப்படாத பிரச்சனைகள், தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் சேர்ப்பது, மிகவும் ஒடுக் கப்பட்ட நிலையில் உள்ள புதிரை வண்ணார் மக்களின் பிரச்சனைகள் ஆகிய கோரிக்கைகளுக்காக உடனடி இயக்கங்கள் நடத்த முடிவாகியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனமும் பிரதிநிதிகள் மேற்கொண்ட உறுதிமொழியும் எதிர்கால இயக்கத்திற்கு திசைவழிகாட்டின.


பேரணி - பொதுக்கூட்டம்


நிறைவாக நடைபெற்ற மாநாட்டுப் பேரணி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தது. பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு கணிசமாக இருந்தது. தலித் மக்களின் உரிமைகளுக்கான இத்த கைய எழுச்சிப் பேரணி சமீப காலங்களில் நடந்ததில்லை. தலித் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் பேரணியில் இடம்பெற்றன. எழுப்பிய முழக்கங் கள் நியாயத்தையும், கோரிக்கைகளையும் மட்டுமல்ல, எழுச்சியையும் பறைசாற்றின. நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் பிரகாஷ் காரத் மற்றும் தலைவர்கள் ஆற்றிய உரை, உரிமைகளுக்கான போர்ப் பிரகடனமாக அமைந்தது. மொத்தத்தில் இம்மாநாடு சாதியமைப்பிற்கு சவால் விடும் திருப்புமுனை மாநாடாக அமைந்தது.

- பி.சம்பத்

உற்சாகத்துடன் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் மே 28, 29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாயிலைத் திறக்க வேண்டும். இல்லையேல் நேரடி நடவடிக்கை எடுப்போம் என்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தீண்டாமைக்கொடுமைகளை வேரோடு சாய்க்க தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், நடுத்தர வர்க்க சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பை உருவாக்கின. ஆலயநுழைவு மறுப்பு, மயானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஏராளமான இயக்கங்களை நடத்தி வெற்றி கண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முறையான அமைப்பாக மாறும் வகையில் தனது முதல்மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளது.

முதல்மாநில மாநாட்டையொட்டி, மாநிலம் முழுவதும் வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. கீழ்த்தஞ்சை வெண்மணி, மதுரை மேலவளவு, திருப்பூர் இடுவாய் ஆகிய இடங்களிலிருந்து நினைவு ஜோதிகள் எடுத்துச் செல்லப்பட்டன. மே 28 அன்று காலையில் புதுக்கோட்டை பி.வி.ஆர். மண்டபத்தில் துவங்கிய மாநாட்டிற்கு விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமையுரையாற்றினார். அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் மீதான விவாதத்தில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முன்னாள் ஐஏஸ் அதிகாரி வி.கருப்பன் மற்றும் எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கதிர் ஆகியோரும், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்களும் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு பொதுச்செயலாளர் உ.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் கே.எஸ்.கனகராஜ் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் முதல் நாள் விவாதத்திற்குப்பிறகு நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் நா.முத்துநிலவன் பங்கேற்ற வழக்காடு மன்றம், புதுகை பூபாளம் கலைக்குழுவின் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்ட தீண்டாமை எதிர்ப்புக் கலைவிழா நடைபெற்றது. மாநாட்டையொட்டி ஓவியக்கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கவிதை - ஓவியக்கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாநில அமைப்பாளர் பி.சம்பத் தொகுப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டின் நிறைவாக தலித் மக்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றன. புதுக்கோட்டையின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் துவங்கிய இந்த பேரணியை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராசன் துவக்கி வைததார். சந்தைப்பேட்டை, திலகர் திடல், பிருந்தாவனம் வழியாக சென்ற இந்தப்பேரணி சின்னப்பா பூங்காவில் நிறைவு பெற்றது.

பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். புதுவை சப்தர் ஹஷ்மி குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளும் இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர், எஸ்.கே.மகேந்திரன் மற்றும் கு.ஜக்கையன் உள்ளிட்ட 17 பேரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி உள்ளிட்ட 17 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை உள்ளடக்கிய 98 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாயிலை ஒரு மாத காலத்தில் திறக்க வேண்டும் எனவும், இல்லையேல் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என்ற அறைகூவல் இந்த மாநாட்டில் விடப்பட்டது. இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தலித் இட ஒதுக்கீடு சதவீதம் உயர்வு, தனியார் துறை இட ஒதுக்கீடு, நிலுவைக் காலியிடங்கள நிரப்பப்படுவதை வலியுறுத்தியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அமைக்குமாறு வலியுறுத்தியும், வன்கொடுமை, தீண்டாமைக்குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் கோரியும், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அரச மர வழிபாட்டிற்கும், பேருந்து நிழற்குடை அமைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் கோரியும், பஞ்சமி நில மீட்பை வலியுறுத்தியும், தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டித்தும், புதிரை வண்ணார் சமூகத்திற்கு தாமதமின்றி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், காங்கியனூர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், தலித்துகளுக்கு நிலம், பட்டா கோரியும், தொகுப்பு வீடு பராமரிப்பு வலியுறுத்தியும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அமலாக்கத்தை கண்காணிக்க வலியுறுத்தியும், டாக்டர்.அம்பேத்கர் வரலாற்று திரைப்படத்தை திரையிட்டு ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆதித்திராவிடப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடும், தரம் உயர்த்தலும் கோரியும், தலித்துகளும் கோவில் அர்ச்சகர்களாகிற உரிமையை வலியுறுத்தியும், புதுச்சேரியிலும் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக்கோரியும், புதுவைக்கு புலம் பெயர்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கோரியும், பழங்குடி மக்கள் நில உரிமை, வன உரிமை பாதுகாக்கக்கோரியும், தலித் உட்கூறு திட்ட நிதி ஒதுக்கீட்டை நீர்த்துப்போகாமல் முழுமையாக அமலாக்குமாறு வலியுறுத்தியும், ஆதிதிராவிட நலத்துறையை செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய தேர்வாணையத் தேர்வின் பொதுப்பட்டியலில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தலித் கிறித்தவர்களை பட்டியல் இனத்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Sunday, May 30, 2010

மனிதக்கடல்!


தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டு மாபெரும் பேரணி

பிரகடனம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

முதல் மாநில மாநாடு

மே 28, 29 - 2010

புதுக்கோட்டை

மாநாட்டுப் பிரகடனம்

புதுக்கோட்டையில் எழுச்சியோடு நடந்தேறி வருகிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடவும், தீண்டாமைக் கொடுமைகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவும் உளப்பூர்வமாக உறுதியேற்கிறது.

இந்தியச் சமூகத்தின் பொருளியல் ஒடுக்குமுறையோடு சமூக ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கவசமாக சாதியக் கட்டமைப்பை காலகாலமாய் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இதன் பன்முக விளைவுகள் உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமை மீதும், ஒற்றுமை மீதும் எதிர்மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. பொருள் ஒடுக்குமுறையினின்று மனித குலத்தை விடுவிக்கிற போராட்டம் சமூக தளத்தில் ஒரு சேர நடைபெற வேண்டியுள்ள தேவையை இம்மாநாடு அழுத்தமாக வலியுறுத்துகிறது. இப் போராட்டக்களத்தில் கரம் கோர்க்குமாறு அனைத்து சனநாயக சக்திகளுக்கும், உழைப்பாளி மக்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

இந்திய மண்ணில் சாதியக் கட்டமைப்பின் உச்சபட்ச கொடுரமாக தீண்டாமை விளங்குகிறது. பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்க்கையின ஒவ்வோர் அம்சத்திலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கிறது. தேநீர்க்கடைகள், சிகை திருத்தகம், சலவையகம், கோவில், குளம், ஆறு, மயானம் என எல்லா அம்சங்களிலும் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் இன்றும் நீடிக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களுக்குப் பெரும் சவாலாய் விளங்குகின்றன. எனவே, இது தலித் மக்களை இலக்குகளாக்குகிற அநீதிகள் எனும் போதும் இது குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. இத்தகு அநீதிகளை எதிர்கொள்ளாமல் சனநாயகத்திற்கான போராட்டத்தில் இம்மியளவும் நகர முடியாது. எனவே தேசத்தின் இழிவாக விளங்குகிற தீண்டாமைக் கொடுமைகளை அடியோடு ஒழிப்பதற்கு இம்மாநாடு உறுதியேற்கிறது.

தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவங்கியதிலிருந்து நடத்தி வருகிற களப்போராட்டங்கள் சமூக நீதிக்கான பயணத்தில் பெரும் நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளன. தலித் மக்களை புறக்கணிக்கிற சுவர்கள் வீழ்ந்துள்ளன. பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட மயானப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதிக்கச் சக்தியினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இப்போராட்டங்களில் தலித் மக்கள் மட்டுமின்றி பெருந்திரளாக உழைப்பாளி மக்களும் பங்கேற்றிருப்பது எதிர்காலப் பயணத்திற்கு நம்பிக்கையூட்டுகிற நிகழ்வுகளாகும் என இம்மாநாடு பாராட்டுகிறது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடும் இக்காலத்தில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றியாகும். பட்டியலினத்தவர் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முதன்முறையாக இவ்வாண்டு மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு கிட்டியுள்ள வெற்றிகளாகும் என்று இம்மாநாடு பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகிறது.

எனினும் நமது இலக்குகளை நோக்கி நாம் வெகு தூரம் முன்னேற வேண்டியுள்ளது. ஆதிக்கச் சக்திகளின் சாதிவெறி ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்றைக்கும் மனித உரிமைகளுக்கும், மாண்புகளுக்கும் சவால் விடுப்பவையாக உள்ளன. அரசு இயந்திரமும், காவல் துறையும் வன்கொடுமைகளுக்கு எதிராக மவுனம் சாதிப்பதும், துணை போவதும், ஆதிக்கச் சக்திகளுடன் கைகோர்ப்பதுமான அணுகுமுறையும் தொடர்கிறது. இவற்றுக்கு எதிரான பரந்த திரட்டல், விழிப்புணர்வு தேவைப்படுகிறது என இம்மாநாடு அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

புதுக்கோட்டையில் கூடியிருக்கிற இம்மாநாடு

* வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டவும்
* தலித்துகளுக்கு நிலம், பட்டா உறுதி செய்திடவும்
* மனித மாண்புகளுக்கு எதிரான சாதிய ரீதியிலான பணிகளைக் கட்டாயப்படுத்துகிற இழிசெயலுக்கு முடிவு கட்டவும்
* அருந்ததியரின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை இடையறாது தொடர்ந்திடவும்
* தலித் கிறித்தவர்களை பட்டியலினத்தவர்களாக அறிவிக்க வேண்டிய இயக்கங்களை நடத்திடவும்
* பஞ்சமி நிலங்களை மீட்டிடவும்
* தனியார் துறை இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றிடவும்
* தலித் நிலுவைக் காலியிடங்களை நிரப்புவதன் மூலம் இடஒதுக்கீட்டின் உயிர்ப்பைப் பாதுகாத்திடவும்
* பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக போராடவும்
* தலித் மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுப் சிறப்புகளை வளர்த்தெடுக்கவும்

இம்மாநாடு கோடானுகோடி உழைப்பாளி மக்களைத் திரட்டிப் போராட உறுதியேற்கிறது. மனித குலத்தின் அவமானச் சின்னங்களாகத் திகழ்கின்ற தீண்டாமை வடிவங்களை அடியோடு இம்மண்ணிலிருந்து அகற்றவும் இம்மாநாடு சபதமேற்கிறது.

ஒடுக்குமுறைகள் எவ்வடிவில் அமைந்தாலும் அவை மனித குல விடியலுக்கான தடைக்கற்களே என்ற உயர்வோடும், அதற்கான புரிதலோடும் முன்னேறுவோம்! இலக்குகளை எட்டுவோம்! என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு பிரகடனம் செய்கிறது.