Sunday, May 30, 2010

பிரகடனம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

முதல் மாநில மாநாடு

மே 28, 29 - 2010

புதுக்கோட்டை

மாநாட்டுப் பிரகடனம்

புதுக்கோட்டையில் எழுச்சியோடு நடந்தேறி வருகிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடவும், தீண்டாமைக் கொடுமைகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவும் உளப்பூர்வமாக உறுதியேற்கிறது.

இந்தியச் சமூகத்தின் பொருளியல் ஒடுக்குமுறையோடு சமூக ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கவசமாக சாதியக் கட்டமைப்பை காலகாலமாய் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இதன் பன்முக விளைவுகள் உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமை மீதும், ஒற்றுமை மீதும் எதிர்மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. பொருள் ஒடுக்குமுறையினின்று மனித குலத்தை விடுவிக்கிற போராட்டம் சமூக தளத்தில் ஒரு சேர நடைபெற வேண்டியுள்ள தேவையை இம்மாநாடு அழுத்தமாக வலியுறுத்துகிறது. இப் போராட்டக்களத்தில் கரம் கோர்க்குமாறு அனைத்து சனநாயக சக்திகளுக்கும், உழைப்பாளி மக்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

இந்திய மண்ணில் சாதியக் கட்டமைப்பின் உச்சபட்ச கொடுரமாக தீண்டாமை விளங்குகிறது. பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்க்கையின ஒவ்வோர் அம்சத்திலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கிறது. தேநீர்க்கடைகள், சிகை திருத்தகம், சலவையகம், கோவில், குளம், ஆறு, மயானம் என எல்லா அம்சங்களிலும் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் இன்றும் நீடிக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களுக்குப் பெரும் சவாலாய் விளங்குகின்றன. எனவே, இது தலித் மக்களை இலக்குகளாக்குகிற அநீதிகள் எனும் போதும் இது குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. இத்தகு அநீதிகளை எதிர்கொள்ளாமல் சனநாயகத்திற்கான போராட்டத்தில் இம்மியளவும் நகர முடியாது. எனவே தேசத்தின் இழிவாக விளங்குகிற தீண்டாமைக் கொடுமைகளை அடியோடு ஒழிப்பதற்கு இம்மாநாடு உறுதியேற்கிறது.

தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவங்கியதிலிருந்து நடத்தி வருகிற களப்போராட்டங்கள் சமூக நீதிக்கான பயணத்தில் பெரும் நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளன. தலித் மக்களை புறக்கணிக்கிற சுவர்கள் வீழ்ந்துள்ளன. பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட மயானப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதிக்கச் சக்தியினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இப்போராட்டங்களில் தலித் மக்கள் மட்டுமின்றி பெருந்திரளாக உழைப்பாளி மக்களும் பங்கேற்றிருப்பது எதிர்காலப் பயணத்திற்கு நம்பிக்கையூட்டுகிற நிகழ்வுகளாகும் என இம்மாநாடு பாராட்டுகிறது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடும் இக்காலத்தில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றியாகும். பட்டியலினத்தவர் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முதன்முறையாக இவ்வாண்டு மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு கிட்டியுள்ள வெற்றிகளாகும் என்று இம்மாநாடு பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகிறது.

எனினும் நமது இலக்குகளை நோக்கி நாம் வெகு தூரம் முன்னேற வேண்டியுள்ளது. ஆதிக்கச் சக்திகளின் சாதிவெறி ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்றைக்கும் மனித உரிமைகளுக்கும், மாண்புகளுக்கும் சவால் விடுப்பவையாக உள்ளன. அரசு இயந்திரமும், காவல் துறையும் வன்கொடுமைகளுக்கு எதிராக மவுனம் சாதிப்பதும், துணை போவதும், ஆதிக்கச் சக்திகளுடன் கைகோர்ப்பதுமான அணுகுமுறையும் தொடர்கிறது. இவற்றுக்கு எதிரான பரந்த திரட்டல், விழிப்புணர்வு தேவைப்படுகிறது என இம்மாநாடு அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

புதுக்கோட்டையில் கூடியிருக்கிற இம்மாநாடு

* வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டவும்
* தலித்துகளுக்கு நிலம், பட்டா உறுதி செய்திடவும்
* மனித மாண்புகளுக்கு எதிரான சாதிய ரீதியிலான பணிகளைக் கட்டாயப்படுத்துகிற இழிசெயலுக்கு முடிவு கட்டவும்
* அருந்ததியரின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை இடையறாது தொடர்ந்திடவும்
* தலித் கிறித்தவர்களை பட்டியலினத்தவர்களாக அறிவிக்க வேண்டிய இயக்கங்களை நடத்திடவும்
* பஞ்சமி நிலங்களை மீட்டிடவும்
* தனியார் துறை இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றிடவும்
* தலித் நிலுவைக் காலியிடங்களை நிரப்புவதன் மூலம் இடஒதுக்கீட்டின் உயிர்ப்பைப் பாதுகாத்திடவும்
* பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக போராடவும்
* தலித் மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுப் சிறப்புகளை வளர்த்தெடுக்கவும்

இம்மாநாடு கோடானுகோடி உழைப்பாளி மக்களைத் திரட்டிப் போராட உறுதியேற்கிறது. மனித குலத்தின் அவமானச் சின்னங்களாகத் திகழ்கின்ற தீண்டாமை வடிவங்களை அடியோடு இம்மண்ணிலிருந்து அகற்றவும் இம்மாநாடு சபதமேற்கிறது.

ஒடுக்குமுறைகள் எவ்வடிவில் அமைந்தாலும் அவை மனித குல விடியலுக்கான தடைக்கற்களே என்ற உயர்வோடும், அதற்கான புரிதலோடும் முன்னேறுவோம்! இலக்குகளை எட்டுவோம்! என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு பிரகடனம் செய்கிறது.

No comments:

Post a Comment